சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், " திமுக அரசு என்றாலே ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கான அரசுதான் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
கல்வி, வேலைவாய்ப்பில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும். சமூக அமைப்பில் எந்தச் சூழலிலும் அவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. சாதியைக் காரணம் காட்டி அவர்களின் வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது.
அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். இத்தகைய சிந்தனை கொண்ட அரசுதான் திமுக அரசு; அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.
தீண்டாமை சம்பவங்களால் கோபம்
மேலும், "அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமை சம்பவங்களை கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், ஆத்திரம், கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது.
அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகாலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி, தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது" என்று வலியுறுத்தினார்.
நிதி ஒதுக்கீடு
தொடர்ந்து, "ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ.3,588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ.543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.14,696.60 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.1306 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும். தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சி.வி. கணேசன், மா. மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’காந்தியின் தூய்மைக்கொள்கை தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாக கொண்டது’