சென்னை: தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு தொடங்கிய போராட்டம் தற்போது வரை தொடர்கிறது.
இந்த போராட்டத்தில், 5 குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள மினி மையங்களைப் பிரதான மையத்தோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையத்திற்கும் கோடை விடுமுறை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராடி வருகின்றனர்.
இரண்டு கட்ட போராட்டம் தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது கட்டமாகப் போராட்டத்தை தற்போது நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:- "அம்மை, தொற்று நோய் உள்ளிட்ட நோய்களால் கோடைக் காலங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர், அதே போல பதிப்பு எங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் அங்கன்வாடிகளுக்கு பொருட்களின் கணக்கு கொடுப்பதில் சிரமமாக உள்ளது. எங்களுக்குக் கொடுக்கப்படும் தொலைப்பேசி சரியாகச் செயல்படவில்லை.
அலுவலர்களிடமும் அமைச்சர் கீதா ஜீவனிடம் பலமுறை மனுக்கள் கொடுக்கப்படும் செவி சாய்க்காமல் இருப்பதால் இரண்டு முறை போராட்டம் நடத்தியும் எங்களுக்கான தீர்வு கிடைக்காததால் தற்போது மூன்றாம் கட்டமாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் முறை போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்" என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: TN Anganwadi: கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!