சென்னை: அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று (பிப்.22) சங்கங்களின் ஊழியர்கள் மறுபடியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்னர், சங்கத்தின் ஊழியர்கள் ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். மேலும், இவர்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110ஆவது விதியின் கீழ் அறிவித்தபடி, ‘அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கப்படுவார்கள், பணியாளர்களுக்கு 21 ஆயிரம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும்’ என்று அறிவித்த நிலையில், இந்த அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை என சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
இதில், மாநிலப் பொதுச் செயலாளர் டி.டெய்சி கலந்துகொண்டு பேசியதாவது, “கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது அமைச்சரும், அலுவலர்களும் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அமைச்சரை மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், அலுவலர்களை மாதம் மூன்று முறையும் சந்தித்துக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
சமூகநலத்துறை செயலாளர் மதுமிதா, கோரிக்கைகளை ஏற்று விரைவில் அரசாணை வெளியிடப்படும் என உறுதியளித்த நிலையில், அரசு அலுவலர்கள் தாமதப்படுத்துகின்றனர். அரசாணை வெளிவரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சங்கத்தின் நிர்வாகிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா!