சென்னை: தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு என தரமான படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் அநீதி. இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தனது நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் தயாரித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அநீதி படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சித்தார்த், சந்தான பாரதி, சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர்கள் வசந்தபாலன் , லிங்குசாமி, ஷங்கர், கே. பாக்யராஜ் , பிரபு சாலமன், ரவி மரியா நடிகைகள் துஷாரா விஜயன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,
சினிமாவில் ரிஷி மூலம், நதி மூலம் பார்ப்பார்கள். ஷங்கர், வசந்தபாலன் படங்கள் எனும் போது அவர்களின் பின்புலம் பார்க்கும் போது படம் நன்றாக இருக்கும். வசந்த பாலனுக்கு நண்பர்களே தயாரிப்பாளராக கிடைத்தார்கள். என்னை பொறுத்தவரை எனக்கு ஈசியாக தயாரிப்பாளர் கிடைத்தார் என்று 16 வயதினிலே படத்தை நினைவு கூர்ந்து பேசினார்.நான் படத்தை எடுக்கும் போது, யாரிடமும் கேட்காமல், இப்படி இப்படி தான் எடுக்க வேண்டும் என்று எனக்காக தெரியும் போது தான் படம் எடுப்பேன். பிறகு இயக்குநராக பண்ணலாம் என்று நினைக்கும் போது புதிய வார்ப்புகள் படம் வந்தது. உன்னை நீ நம்பி, உன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம். சினிமா என்றால் சினிமாவை மட்டும் நினைத்து கொண்டு வந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்றும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை துஷாரா விஜயன்,
இது என்னுடைய முதல் மேடை மாதிரி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று இயக்குநர் வசந்த பாலனுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் சேர்ந்து ஒர்க் பண்ண வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. அர்ஜுன் சிறந்த நடிகர். அர்ஜுனும் நானும் போட்டி போட்டு தான் நடித்தோம் என்று சொல்லுவேன். ஜி.வி இசை ரொம்ப அற்புதம். நமக்கும் ரொமான்ஸ் பாட்டு வருமா என்று எதிர்பார்த்த காலம் போய் ரொமான்ஸ் பாட்டே வந்துருச்சு என்று மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ்,
இந்த தியேட்டருக்கு நிறைய முறை நண்பர்களுடன் படம் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இன்று நமது படத்தோட பேனர் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. உள்ளே வரும் போது பதட்டமாக இருந்தது. ஷங்கர் கிட்ட உட்காரும் போது இன்னும் அதிகமாகிவிட்டது. நிறைய இயக்குநர்கள் என் பெயரை சொல்லி பாராட்டியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கரோனா காலத்தில் வசந்த பாலன் ரொம்ப முடியாமல் இருந்தார். அதிலிருந்து மீண்டு வரவே 4 முதல் 5 மாதம் ஆனது. முழுமையாக குணமாகாமல் ஓய்வு எடுக்காமல் ஷூட்டிங் வந்தார். உண்மையில் அவர் நல்ல முன் உதாரணம். உங்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் எனவும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்,
2006 ல் முதலில் ஷங்கர் பேனரில் இசையமைப்பாளராக வைத்தவர் வசந்த பாலன். அதே போல் 1993 ல் ஷங்கர் படத்தில் பாடல் பாடினேன். மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு அந்நியன் , வெயில் படத்தில் பாடினேன். ஏதோ ஒரு விதத்தில் பாடல் மூலம் வெற்றி படங்களில் இருந்து வருகிறேன் என்றும் கிட்டத்தட்ட 100 படங்களை நெருங்கி விட்டேன். அடுத்த ஆண்டு 100 வது படத்துக்கு இசையமைக்கிறேன். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வரப் போகிறது. சர்வதேச விழாக்களில் தமிழ் படங்களை எடுத்து செல்ல கூடிய தகுதி படைத்த இயக்குநர் வசந்தபாலன். வெயில் படமும் வெற்றி பெற்றது. அவரோடு 4 படங்கள் சேர்ந்து பணியாற்ற முடிந்தது. அநீதியை பொறுத்தவரை மியூசிக்கல் ஆல்பமாக இருக்கும். நிறைய அழகான பாடல்கள் வசந்த பாலனோடு அமைந்திருக்கிறது. இந்த படத்திலும் இருக்கிறது.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார்,
நான் தைரியமாக பேசுவேன். பிக் பாஸ்க்கு பிறகு நிறைய படங்கள் பண்ணுகிறேன். நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஷங்கர் & வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி இசையில் உருவான இந்த படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். வசந்த பாலனுக்கு நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சித்தார்த்,
அநீதி - இந்த படத்தை தைரியமாக காசு செலவு பண்ணி படம் பார்க்கலாம். காரணம், ஷங்கர் படம் என்றால் நம்பி பார்க்கலாம். இந்த படத்தின் படைப்பாளி வசந்தபாலன். அவரை ஒரு நண்பனாக, இயக்குனராக , உழைப்பாளியாக பார்த்திருக்கிறேன். புதிய தயாரிப்பாளர்கள் சேர்த்திருக்கிறார்கள். பாலன் எப்போதும், இந்த விஷயத்தை மக்களுக்கு இந்த விதத்தில் சொல்லியே தீருவேன் என்று அழுத்தமாக சொல்லுவார். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ்க்காக கண்ணை மூடிக்கொண்டு காதுக்காக தியேட்டரில் போய் படம் பார்க்கலாம். இந்த படத்தை நான் தியேட்டரில் போய் நிச்சயமாக பார்ப்பேன். நாம் ஒரு வாழ்க்கையை பார்த்திருப்போம். ஏன் அந்த வாழ்க்கையை யாரும் படமாக எடுக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் பலரும் நினைப்போம். அந்த மாதிரி வரிசையில் இந்த படம் நிச்சயமாக பேசப்படும். அதற்கு காரணமாக அர்ஜூன் தாஸ், துஷாரா இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அர்ஜூன் தாஸின் குரலுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்றும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர்,
அநீதி படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இது எதார்த்தமான, திரில்லரான கதையாக இருத்தது. ஒவ்வொரு இடங்களிலும் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். எப்படி நடத்த வேண்டும் என நினைக்க வைத்திருக்கிறார் வசந்த பாலன். அவருடைய அழகான இயக்கத்தில் நம்மை கண்கலங்க வைக்கிறார். படத்தின் இறுதி காட்சியில் பிரம்மிக்க வைக்கிறார். ஜி.வி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசையை அழகாக கொடுக்கிறார் என்றும், அர்ஜுன் தாஸ் அவருடைய தனித்தன்மையான நடிப்பால் கதிகலங்க வைத்திருக்கிறார். வனிதா விஜயகுமார் வரும் போது படம் பார்க்கும் போது மட்டுமல்லாமல் நம்மையும் பதைபதைக்க வைக்கிறார் என்றும் காளி வெங்கட்டின் நடிப்பு பார்த்து கண் கலங்கி இருக்கிறேன் என்றும் ஒவ்வொரு நடிகர்களையும் பாராட்டி பேசினார். அத்தனை தொழிலாளிகளும், முதலாளிகளும் பார்க்க வேண்டிய படம். நீங்கள் படத்துக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வசந்தபாலன்,
எல்லாரையும் அநீதி வெல்லட்டும் என்று சொல்ல வைத்தது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் நான் சொல்ல வந்தது, தொழிலாளிக்கு வேறு அநீதி, முதலாளிக்கு வேறு அநீதி. இங்கு நீதி என்பது நல்லோர் வகுத்ததல்ல நீதி வல்லான் வகுத்ததே நீதி. அப்போது எளியோருக்கு அது எப்போதும் அநீதியாகவே இருக்கும். அந்த குரலை தான் நான் சொல்கிறேன். இந்த குரலை தான் அர்ஜுன் தாஸ் வாயிலாக படத்தில் சொல்ல வருகிறேன். இந்த படத்தில் அநீதி என்பது நீதியின் குரல். நீதியின் கண்ணீர், கூக்குரல், நீதி மறுக்கப்பட்டவன் குரல் தான் அநீதி எனவும் , இயக்குனர் ஷங்கரை மாதிரியான குரு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் என்றும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார். அநீதி திரைப்படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க:சூடானில் சூடுபிடிக்கும் மோதல்: ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!