அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திருக்குர் ஆன் வழங்கப்பட்ட புனித மாதத்தில் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில்தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில்தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர்.
இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவதுதான் ரமலான் திருநாளாகும்.
ரமலான் மாதத்தில் வழங்கப்பட்ட குரான் நூல் உன்னதமான போதனைகளைத்தான் உலகத்துக்கு வழங்குகிறது. அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.