சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறையைத் தேர்வு செய்த 673 இளநிலை உதவியாளர்களுக்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குருப் 4 பணியில் தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் 2 பேருக்கு பணியாணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். 50 ஆயிரம் நபர்களை அரசு வேலைக்காக எடுப்பதற்குத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அரசாங்கம் என்ற இயந்திரத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றால், காலிப் பணியிடங்களை சரியாக நிரப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் முதல்வன்" கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறுவதில் பணி ஆணை பெற்றுள்ள இளநிலை உதவியாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், பணி நியமனம் பெற்றவர்கள் தங்களது பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோப்புகளை உடனுக்குடன் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், "வாணியம்பாடி அருகே குழியில் நிரம்பி இருந்த தண்ணீரில் விழுந்து மரணம் அடைந்த மாணவிகளின் மறைவிற்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருவரும் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது உள்ளே விழுந்து இறந்துள்ளனர்.
மழைக் காலங்களில் பள்ளி வளாகங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றுமாறு கல்வி அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிற துறையைச் சேர்ந்த அலுவலர்களும், மாவட்ட ஆட்சியரும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது" என்று கூறினாரர்.
மேலும், முந்தைய காலங்களில் மாணவர்கள் திருந்தினால் போதும் என்ற எண்ணத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பதையும், அடிப்பதையும் பெற்றோர் எதிர்க்கவில்லை என்று கூறிய அமைச்சர், தற்போது ஆசிரியர்கள் கடிந்து கொண்டாலே மாணவர்கள் தவறான முடிவெடுப்பது வருத்தமளிப்பதாகவும், ஆசிரியர்களின் கண்டிப்பு பெற்றோரின் கண்டிப்பு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "தற்போதுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் சற்று கண்டித்தாலே தவறான முடிவெடுக்கும் மனநிலையில் உள்ளனர். அதனைச் சமாளிக்கத்தான் 800 மனநல மருத்துவர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் கண்ணை மட்டும் விட்டுவிட்டு, உடலுள்ள தோலை எல்லாம் அடித்து உறித்து விடுங்கள் என நமது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது. மாணவர்களை லேசாக திட்டினாலே தவறாக முடிவெடுக்கின்றனர். இந்த பிரச்னைகளை எப்படி கையாள்வது என நாங்களும் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க, பல வகையான கலைத்திறன் போட்டிகளை நடத்துகிறோம். மாணவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாதா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வருங்காலத்தில் ஆசிரியர்கள் எமிஸ் (EMIS) இணையதளத்தை வருகை பதிவேட்டிற்காக மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க இருக்க உள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தலைமையில் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை சீராக்குவது குறித்தான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்தப் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்" என்று தெரிவித்தார்.