சென்னை: தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி. அவரது பன்முகத்தன்மை, மக்களுக்கு அளித்த நலத்திட்டங்களை போற்றும் விதமாக, கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு இலட்சினை வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டார்.
கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணா காந்தி பெற்றுக் கொண்டார் . இலச்சினையில் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அறிவியல் சொற்களில் 'முடிவற்றது' என்பதை குறிக்க பயன்படுத்தும் 'infinity' குறியீடு இடம்பெற்றிருந்தது.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், காந்தியடிகள் இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு உண்டு என்பதை அறிந்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கும் முன்பு காங்கிரசில் காந்தியின் தொண்டராக இருந்தார்.
கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரியார் மன வேதனை அடைந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி மீது மதிப்பு கொண்டவர் கோபாலகிருஷ்ண காந்தி. அவர் இங்கு வந்து பேசியது என் வாழ்நாளில் கிடைத்துள்ள மாபெரும் பேறு. அந்த பெயரை காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன். தமிழ் மொழிக்கு உயிராக இருந்தவர், உதயமான நாள் நாளைய தினம். என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும் , கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன்.
நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநித. அவர் தொடாத துறைகளே இல்லை. அவர் போட்டுத் தந்த பாதையிலே அனைத்து துறைகளும் செயல்படுகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக தொழில் நிறுவனங்கள் உருவாக காரணம் கருணாநிதி. திராவிட மாடல் அரசு தொழில் புரட்சியை உருவாக்கி வருகிறது. எனது சிங்கப்பூர் , ஜப்பான் பயணத்தில் ரூ.3,233 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழகம், திமுக அரசு மீது அவர்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர்.
இந்தியாவில் முதலீடு செய்வதாக இருந்தால் தமிழகத்தில்தான் தொழில் தொடங்குவோம் என அவர்கள் கூறியுள்ளனர். ஜப்பானில் கருணாநிதி பெயரை சொன்னாலே அங்கிருக்கும் தமிழ் மக்கள் கைதட்டுகின்றனர். கருணாநிதி நூற்றாண்டுக்கான குழு விரைவில் அமைக்கப்படும்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் 'கலைஞர் பன்னாட்டு கூட்டரங்கம் ' அமைய உள்ளது. உணவகம், தங்கும் விடுதிகளுடன் சர்வதேச தரத்தில் அமைய உள்ள இக்கூட்டரங்கில் உலகளாவிய வர்த்தக மாநாடுகள், தொழில் கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள் நடைபெறும்.
சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் போது சர்வதேச கூட்டரங்கம் அமைக்கும் முடிவை நான் எடுத்தேன். உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில் நுட்ப கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் நடக்கும் இடமாக இது அமையும். எதிர்காலத் தேவைக்கு போதுமானதாக தற்போது நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் இல்லை. புதிய கூட்ட அரங்கம் நட்சத்திர தங்கும் விடுதிகள், நட்சத்திர உணவகங்கள், ஊடக அரங்குகள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்களை உள்ளடக்கி உலகத்தரத்தில் பிரமாண்டமாக அமையும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "சாதாரண கிராமத்தில் பிறந்த எங்களை போன்றோரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. எங்களை அமைச்சராக்கி பெரும் அந்தஸ்து கொடுத்தார். அதை அப்போது நாங்கள் பெருமையாக கருதினோம். ஆனால் அதைவிட இப்போது பெருமையாக நினைப்பது அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுதான். எந்த காலத்திலும், எந்த புயலாலும் அழிக்க முடியாத செயல்களை செய்தவர் கருணாநிதி.
செத்துப்போன மொழிகளுக்கு எல்லாம் சீர் செய்வதைப் போல செம்மொழி அந்தஸ்து இருந்தது. ஆனால் நூற்றாண்டு கோரிக்கையாக இருந்த தொன்மையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநதிதான். தமிழ் மொழி உள்ளவரை கருணாநிதியின் பெயர் நிலைத்திருக்கும். மற்ற சில பெயர்கள் அடிபட்டு போகும். ஆனால் கருணாநிதி பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்.
அகில இந்திய அளவில் தலைவராக இருந்தவர் கருணாநிதி. கோபாலபுரம் இல்லத்தில் இருந்தபடி, கிங் மேக்கராக இருந்து பலரை பிரதமராகவும் , குடியரசுத் தலைவராகவும் ஆக்கியவர் கருணாநிதி. கருணாநிதியிடம் நீங்கள் குடியரசுத் தலைவராகலாமே என ஒருமுறை கேட்கப்பட்டது. அப்போது 'என் உயரம் எனக்கு தெரியும், என் மாநில மக்கள்தான் எனக்கு பெரிது' என்று கூறினார். ஸ்டாலின் இல்லாமல் வேறு யாரும் தற்போது முதலமைச்சராக இருந்திருந்தால் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு, சின்ன விளம்பரம் கூட கிடைத்திருக்காது. ஆனால் காலம் சரியாக யாரை கொண்டு வர வேண்டும் என தீர்மானித்து தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வந்துள்ளது" என்றார்.
பின்னர் கோபாலகிருஷ்ண காந்தி பேசுகையில், ”எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கலைஞர் ஆட்சி திரும்ப வேண்டும் என வேண்டுகிறேன். நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வதில்லை. ஆனால் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பதில்லை. கலைஞரின் சன்னதியில் பொய் பேசக்கூடாது. மக்கள் அளித்திருக்கும் பொறுப்பு, அதிகார பகட்டை காட்டுவதற்கு அல்ல. பொதுச் சொத்தை அறக்கட்டளையின் சொத்து போல் காக்க வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் நேரத்தை புனிதமான நேரமாக கருத வேண்டும். ஊழல் என்பது ஊழல் தான். ஆளும்கட்சி ஊழல், எதிர்கட்சி ஊழல் என பார்க்க கூடாது. அரசியலமைப்பு நமக்கு வழிகாட்டும் விளக்கு. சில சமயம் அது மூடப்பட்டு விடுகிறது. அரசியலமைப்பு விளக்கு நித்திய விளக்கு. பாரபட்சமற்ற நீதித்துறை, சிறந்த நிர்வாகிகள், எச்சரிக்கையான எதிர்க்கட்சி இவற்றில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
இதற்கான காரணம் கலைஞர் கருணாநிதி. கலைஞரும், ராஜாஜியும் உள்ள புகைப்படம் ஒன்றை கண்காட்சியில் பார்த்தேன். ராஜாஜி மீது மரியாதை கொண்டவர் கலைஞர். முதலமைச்சர் ஸ்டாலின் லட்சியவாதி. உங்கள் தலைமை பார்த்து தமிழ்நாட்டின் பலம் உறுதியாகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களில் அமிலம் இருக்க கூடாது" என குறிப்பிட்டார்.