சென்னை: கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்திருப்பவர்கள், மூர்த்தி(78), பானுமதி (76) தம்பதி. அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைதளத்தில், தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கேட்டை மூடுவதற்கு மூர்த்தி வெளியே வந்துள்ளார். அப்போது இரும்பு கேட்டை தொட்டபோது மின்சாரம் தாக்கி கேட்டை பிடித்தபடியே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற கணவர் வெகுநேரமாகியும் வரவில்லையே என அவரது மனைவி பானுமதி வெளியே சென்று பார்த்தபோது, இரும்பு கேட்டில் தொங்கியபடி இருந்த கணவரை காப்பாற்ற சென்றபோது, பானுமதியும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பார்த்து இது குறித்து அசோக் நகர் காவல் துறையினருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற மின் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மின் இணைப்பைத்துண்டித்து இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட தகவலில் இரும்புகேட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பாம்பைக்கண்டு பயம்கொள்ள வேண்டாம்; இனி பாம்புகளை மீட்க 'சர்ப்பா' செயலி!