தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாகுபடி பரப்பை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை உருவாக்கி, பம்பு செட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது வேளாண்மைத் துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 2020-21ஆம் நிதி ஆண்டில் 14 மாவட்டங்களில் பாசன வசதி இல்லாத இடங்களில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய 118 விவசாய குழுமங்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ. 10.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்துவதற்கும், முதல் தவணையாக ரூ. 6.11 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்குமான அரசாணையை ஜூலை 10ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையால் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டம் என கண்டறியப்பட்ட 47 குறுவட்டங்களில் 1,233 சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் நீரை விவசாயிகளுக்கிடையே பங்கிட்டு பயன்பெறும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு சூரிய சக்தி, மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் அமைத்தல், பாசன நீரினை வீணாக்காமல் நேரடியாக வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு குழாய்களை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ், 90 மீட்டர் ஆழத்தில் குழாய் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 3 லட்சமும், 100 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.1.1 லட்சமும், 20 மீட்டர் ஆழத்தில் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.6.5 லட்சமும், சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 2020-21ஆம் ஆண்டில், 1,233 சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து சாகுபடியை மேற்கொண்டு அவர்களின் பொருளாதார நிலை மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இத்திட்டத்தை இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.