அமமுக முதல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று (பிப்.25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "உண்மைக்கும் விசுவாசத்திற்கும் அன்று ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, அதிமுக இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அமமுக.
நம் இயக்கத்தை பதிவு செய்யவிடாமல், டெல்லி உயர்நீதிமன்றமே உத்தரவிட்டு, குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க முன் வந்தபோது உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்தார்கள். இறைவன் தீர்ப்பால் இந்த இயக்கம் உருவாகி உள்ளது. அதன் காரணமாகதான் தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா பெயர் எங்கும் ஒலிக்கும் வகையில் நம் இயக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. அமமுக கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேசிவருகிறோம். நல்ல கூட்டணி அமையும். திமுக என்னும் தீயசக்தியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்.
செய்தியாளர் சந்திப்பு:
இதன் பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அமமுக முதல் அணியாக இருக்கும். மூன்றாவது அணி என்ற ஒன்றை அமைக்கமாட்டோம். கூட்டணியில் தேசிய கட்சிகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சசிகலா, அம்மாவின் தொண்டர்கள்தான் ஒருங்கிணைந்து செயலப்பட வேண்டும் என்றுதான் சொன்னார். பயத்தில், பதற்றத்தில் இருந்தால்தான் குழப்பம் வரும். திமுகவால் நிச்சயம் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு எடுத்துக்காட்டுதான் புதுச்சேரி நிகழ்வு. சட்டபேரவை தேர்தலில் தனித்து போட்டியிட தயக்கம் இல்லை. எல்லா கட்சியும் தனித்து நின்றால் நானும் தனித்து போட்டியிடத் தயார்.
சசிகலா விருப்பப்பட்டால் அவரை அமமுக தலைவராக அறிவிப்போம். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஆளுங்கட்சி, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளவர்கள் குரல் கொடுத்தே ஒன்றும் நடக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவை மீட்டெடுப்போம், டிடிவியை முதலமைச்சர் அரியணையில் அமரவைப்போம்!'