பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலாவை வழிநெடுகிலும் காத்து நின்று பேராதரவுடன் வரவேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவேற்பை சசிகலாவிற்கு வழங்கிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்குப் போய்ச் சேர்ந்த நிம்மதியோடு மனநிறைவோடும் இந்த மடலை எழுதுகிறேன். வழிநெடுக தொடர்ந்து இவ்வளவு நேரம் ஓரிடத்தில்கூட உற்சாகம் குறையாத உணர்வுப்பூர்வமான வரவேற்பை வரலாறு பார்த்ததேயில்லை.
ஆளும் தரப்பில் இருந்து அத்தனை முனைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும், போடப்பட்ட தடைகளையும் மீறி இந்த வரலாற்றுச் சாதனை எவ்வாறு நிகழ்ந்தது?
லட்சக்கணக்கானோர் திரண்டும் சிறு வன்முறைகூட இல்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்ததெல்லாம் எப்படி சாத்தியம்? கூட்டம் கூடுவதே தொண்டர்களைத் தூண்டிவிட்டு, வன்முறையை நிகழ்த்தி, பொதுச்சொத்துகளைச் சூறையாடி, மக்களை அச்சுறுத்தி பலத்தைக் காண்பிக்கத்தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்துனீர்கள்? என்றெல்லாம் மாற்றுமுகாம்களில் இருப்பவர்கள் ஊடகத்துறையினர், உயர் அலுவலர்கள் என பலரும் வியப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து, தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்டு வந்து, பழங்காலத்தில் படைகள் முகாமிடுவதைப் போல முதல் நாளிலிருந்து தங்கி, டீக்கடைகள் கூட இல்லாத இடங்களில் கட்டுச்சோற்றைச் சாப்பிட்டும், சாலையோரங்களில் அடுப்பு மூட்டி உப்புமா, கிச்சடி செய்து பசியாறிவிட்டும் இரண்டு நாள்களாக காத்திருந்த தங்களின் உண்மையான அன்பின் வழிநெடுக பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனேன்.
பல இடங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் என மகிழ்ச்சி பொங்க நம் அன்னையை வரவேற்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி.
இது தொடக்கம்தான்; இதே உணர்வை களத்தில் காண்பித்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு நின்று, ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலரின் சுயநலத்தால், குறுகிய புத்தியால் திமுக எனும் தீயசக்தி மீண்டும் எழுந்துவிடுவதைத் தடுப்பதிலும், ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியைத் தமிழ்நாட்டிற்கு அளித்திடுவதிலும் மட்டுமே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும்.
சத்திய போராட்டத்தில் நமது வெற்றியை நாளைய சரித்திரம் பேசட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புகாரை படிக்க தெரியாத ஸ்டாலின், குறைகளை எப்படி தீர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி