கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் இழந்து அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு மூன்று நேரமும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், கிராமப்புறங்கள், பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் பாவேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஊரடங்கு சூழலை கருத்தில் கொண்டு எளிய மக்களுக்கு மூன்று நேரமும் இலவச உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் நாள் ஒன்றுக்கு 31,500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மொத்தமுள்ள 654 உணவகங்களிலும், ஒரு நாளைக்கு ஏழு லட்சம் பேர் பயன்பெற்று வருவதாகவும் எடுத்துரைத்தார்.
இது தவிர, சமுதாயக் கூடங்கள் மூலமாகவும் ஆங்காங்கே உணவு சமைக்கப்பட்டு ஏழை எளியோருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 3 லட்சம் புகைப்பட கலைஞர்களின் குடும்பங்களை அரசு காக்க வேண்டும்: விஜயகாந்த்