சென்னை : தொடர் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, நெல்லை, கன்னியாகுமர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. தமிழகத்திற்கு இன்று (நவ. 4) ஆரஞ்சு அலர்ட் வழங்கி உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தென் மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அதனால், இன்று (நவ.4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை, சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : தொடர் கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!