சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (65). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். இவரது மனைவி தேவி (54), இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகள் இறந்துவிட்டார்.
கரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரத்திற்குச் செல்லாத நிலையில் இரவு 8 மணியளவில் இரவு உணவை தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீர் நெஞ்சுவலியால் துடிதுடித்து ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் 108 அவசர ஊர்தியை தொடர்புகொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான முறை அந்தப் பகுதிவாசிகள் தொடர்புகொண்டும் அவசர ஊர்தி வரவில்லை. அதேபோல அம்பத்தூர் மண்டல சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தொடர்புகொண்டபோது அவர்களும் அழைப்பை ஏற்கவில்லை.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாகியும் அவசர ஊர்தி வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த அவசர ஊர்தி ஊழியர்கள் பிரகாஷை சோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அவசர ஊர்தியை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல் துறையினர் அப்பகுதி மக்களை சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.
கரோனா சிகிச்சைக்காக அவசர ஊர்தி வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் நிலையில் இதுபோன்ற அவசர சிகிச்சைக்காக அழைத்தால் வர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கும் பொதுமக்கள் அரசு கவனம் செலுத்தி மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.