சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் கோயில் திருவிழாவுக்கும், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த 77 வயதான நாடக கலைஞர் சிவபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், காவல் துறையினர் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளில் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அமைதிப் பேச்சு நடத்தப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், நடப்பாண்டு இரு தரப்பினர் மோதலை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையும், கோவில் திருவிழாவையும் ஒரே நேரத்தில் கொண்டாட முடியவில்லை எனவும், இதுபற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பர் எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், கிராமத்தில் திருவிழாவையும், அரசியல் சட்ட தந்தை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையும் ஒரே நேரத்தில் ஏன் நடத்த கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இரு நிகழ்வுகளும் அமைதியாக நடப்பதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்