சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், இரண்டு துணை ஆய்வாளர் உள்பட ஆறு காவலர்களை ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்து காவல் இணை ஆணையர் மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பூட்டை உடைத்து அலுமினியம், கணினி, மின்விசிறி உள்ளிட்ட பொருள்களை திருடிய வழக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த பாபு மற்றும் 17 சிறுவன் உள்பட ஐந்து பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 7 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் சிறுவன் மட்டும் நீதிமன்ற பிணையில் வெளியான நிலையில், அம்பத்தூர் காவல் நிலையத்தில் மீதம் இருந்த நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் தயாராக இருந்தனர்.
காவல் நிலையத்தில் இருந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், பாபு ஆகிய நான்கு கைதிகளும் அதிகாலை 4.30 மணிக்கு கழிவறை செல்ல வேண்டும் என காவலில் இருந்த இரண்டு காவலர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, கைதி அறையை திறந்து அவர்கள் நான்கு பேரையும் கழிவறைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, நான்கு கைதிகளும் காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடினர்.
தகவலறிந்த அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர், தப்பியோடிய கைதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இரவுக்குள் காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்: பட்டா கத்தியால் வெட்டிய ரவுடி உள்பட 3 பேர் கைது!