சென்னை அம்பத்தூரை அடுத்த கருக்கு டி.டி.பி காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் (32). இவர் அயனாவரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி வளர்மதி (27). இந்நிலையில் இன்று வளர்மதி, தனது மாமியார் ராஜாமணியுடன் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல் வீட்டிலிருந்து புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக மூன்று இளைஞர்கள் வந்தனர். பின்னர், ராஜாமணியை வழிமறித்து இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவர் துண்டு சீட்டைக் காட்டி முகவரி விசாரிப்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். மற்றொரு இளைஞர் வளர்மதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். அதற்குள், இருவரும் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து வளர்மதி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:வாங்க வேலை வாங்கித் தரேன்.. நம்பி சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு!