சென்னை அம்பத்தூர் ஐ.சி.எஃப். காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூன் மாதம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்குச் சொந்தமான ரோந்து வாகனம் உள்ளிட்ட சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இதில் ரோந்து வாகனம் உள்ளிட்ட ஐந்து வாகனங்களின் கண்ணாடியை கஞ்சா போதையில் இருந்த சிலர் அடித்து நொறுக்கினர். மேலும் ரோந்து வாகனத்தினுள் இருந்த காவலர்களையும் அவர்கள் தாக்கினர்.
இந்தத் தக்குதலில் ஈடுபட்ட ஏழு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்தத் தாக்குதலில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கடா (எ) ஜோஸ்வா அப்போது அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். இவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு (அக். 6) அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை மடக்கி காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அத்திப்பட்டுவில் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தை உடைத்த கடா (எ) ஜோஸ்வா என்பது தெரியவந்தது.
மேலும் கஞ்சா போதையில் வாகனத்தை உடைத்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் இளைஞர் ரகளை அதிர்ச்சியில் மக்கள்