சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள கலைமகள் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் நிறுவனர் பெருமாள். இப்பள்ளியின் நிர்வாகிகளாக பெருமாளும் அவரது வாரிசுகளும் உள்ளனர். இந்நிலையில் பெருமாள், அவரது மூத்த மகன் பால முருகன் ஆகியோர் மீது, இளைய மகன் வெங்கட்ராமனின் மனைவி தேவி என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கூறியதாவது, "கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனரான பெருமாளும், அவரது மூத்த மகன் பால முருகனும் சேர்ந்து பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். நான் அந்தப் பள்ளி நிர்வாகத்தில் பணியாற்றியபோது இது தெரியவந்தது.
எனது கணவர் வெங்கட்ராமன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவ்விருவரும் எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதோடு, இதை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். இது பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரிந்தாலும் மூடி மறைக்கவே முயல்கின்றனர்.
பள்ளி மாணவிகளின் எதிர்காலத்தைக் கருதி இந்தப் புகாரை தற்போது அறித்துள்ளேன். இதனால் எனது உயிருக்கும் இரு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தேவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்