ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் பரோலில் (விடுப்பு) வெளிவந்த பேரறிவாளன், கடந்த 7ஆம் தேதி மீண்டும் சிறை சென்றார்.
இந்நிலையில், பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று (டிச.23) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப்குமார், ”கரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை காணொலிக் காட்சி வாயிலாக மட்டுமே சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால், பேரறிவாளனின் வழக்கறிஞர் என்று கூறி பலர் கும்பலாக சிறையில் நேரில் சந்திக்க வருகின்றனர்.
எனவே, உறவினர்கள், நண்பர்களை கணொலிக் காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞரைப் பொருத்தவரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதில் யாரை அனுமதிப்பது என்பதை சிறைக் கண்கானிப்பாளர் முடிவு செய்வார். அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் வருகிற ஜனவரி 19ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தனது மகன் பேரறிவாளனை புழல் சிறையில் அற்புதம்மாள் இன்று (டிசம்பர் 23) சந்திக்க உள்ளார்.