சென்னை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து நேற்று (நவம்பர் 11) தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை கைதிகளான ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிரத்தியேகமான சட்டப் பிரிவான 142 பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து அதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் விடுதலை செய்யக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நேற்று (நவம்பர் 11) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது மின் அஞ்சல் (E Mail) மூலமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்ப்பை பெற்றுக்கொண்டு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பரோலில் இருந்த நிலையில் சிறைக்குச் சென்று நடைமுறைகளை முடித்த பின் விடுதலை செய்யப்பட்டார். இதே போன்று சாந்தன், முருகன் ஆகிய இருவரும் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகினர். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடைசியாக ரவிச்சந்திரன் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலையை ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதையும் படிங்க:Rajiv Gandhi murder Case:7 பேர் கைது முதல் விடுதலை வரை.. நடந்தது என்ன?