சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் ஜெகதாம்பாள் காலணி பகுதியில், கரோனா தடுப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்தபின் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தொடர் நடவடிக்கையால் இன்று சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை 81 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,784 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் அதிகப்படியான பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் கரோனா தடுப்பு பணிக்காக அலுவலர்களை நியமித்திருப்பதால், மாநிலம் முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து பொதுமக்கள் அனைவருக்கும் 'எலிசா பரிசோதனை' எடுக்கக் கோரிய திட்டமும் தற்போது தொடங்கியுள்ளது. அதற்கான ரத்த மாதிரி எடுக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதிக்க வேண்டுமென முதலமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே இருந்தது போல மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க வேண்டுமென்பதே அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.