கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடமிருந்து பெற வேண்டிய கட்டணம் பெற முடியாமல் உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் தனியார் பள்ளிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், “அனைத்து மெட்ரிக், சுயநிதி, மழலையர், தொடக்கப் பள்ளிகள், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித கால தாமதமும் இல்லாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இல்லாமல் வழங்கி விட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...மருத்துவர்களுக்கான கரோனா பரிசோதனை முடிவுகளை எழுத்துபூர்வமாக வழங்குக!