சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பு அணை கட்ட முயற்சி செய்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்க இன்று (ஜூலை 12) தமிழ்நாடு அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அருகே புது அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கர்நாடக அரசு தெரிவித்து முனைப்புக்காட்டி வருகிறது.
டெல்லியில் சென்று எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன்
சில தினங்களுக்கு முன்பு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று ஒன்றிய ஜல்சக்திதுறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துவிட்டு வந்த நிலையில், 'தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டப்படாது' என தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரிதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக அணை கட்டுவதை கண்டித்த நிலையில், ஒரு மனதாக உச்ச நீதிமன்றத்தை நாடி தடைபெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
கர்நாடகவில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவிற்கு ஆதரவு அளிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.