சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 62 இடங்கள் காலியாக உள்ளன. மாநில ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் வேறு கல்லூரிகளில் இடங்களை தேர்வுசெய்துள்ளனர்.
இவர்கள் புதியதாக தேர்வுசெய்த கல்லூரியில் சேர்ந்தால், அரசு மருத்துவக் கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் மீண்டும் காலி இடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 31 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 812 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான அனைத்துக் கட்ட கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மாப்-அப் கலந்தாய்விற்கு பின்னர் (Mop Up Counselling) 111 இடங்கள் காலியாக இருந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஸ்டேரே வெகன்சி கலந்தாய்வில் 49 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் 62 இடங்கள் காலியாகவுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்களைத் தேர்வு செய்த 13 பேர் அகில இந்திய ஒதுக்கீட்டில், வேறு கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் கல்லூரி மாறி சேர்ந்தால், அந்த இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டியது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை மாநிலங்களுக்கு திருப்பி அளிக்காது என ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர விரும்பிய மாணவர்களும் சேர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டில் அவசரமா? எடப்பாடி பழனிசாமி பதில்