சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துவிட்டதாகக்கூறி, வேறோருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சிப்பன் திடீரென சுயநினைவை இழந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் நிலை சீரானதால் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால், கொளஞ்சிப்பனின் மருத்துவ விவர குறிப்பை மாற்றாமல், அதே படுக்கையில் சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலர் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி பாலர் உயிரிழந்த நிலையில், கரோனா சோதனைக்குப் பின்னர் கொளஞ்சியம் உயிரிழந்தாகக்கூறி, பாலரின் சடலத்தை கொளஞ்சியத்தின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இறுதி சடங்கின் போது, முகத்தை பார்த்த உறவினர்களுக்கு வேறொருவரின் சடலத்தை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் மருத்துவர், ஊரக சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கை அளிக்குமாறு மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டார்.