சென்னை: திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒருபகுதியாக உள்ளது ஆலந்தூர் தொகுதி. ஆலந்தூர் தொகுதியில் 1967ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக ஏழு முறையும், அதிமுக ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1967, 1971 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்ஜிஆர் வென்ற தொகுதியும் இதுதான். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரன் வெற்றிபெற்றார். பின்னர், அவர் 2013இல் அந்தப்பதவியில் இருந்து விலகியதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என்.பி வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தா.மோ.அன்பரசன் எதிர்த்துப் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரனை விட 19 ஆயிரத்து 169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
களம்
மணப்பாக்கம், கவுல் பஜார் கிராமம், நந்தம்பாக்கம், செயின்ட் தாமஸ்மவுண்ட், ஆலந்தூர், மூவரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இத்தொகுதியில், வழிபாட்டுத் தலங்கள் அதிகம் இருக்கிறது. மயிலாப்பூர், மாம்பலம் தொகுதிக்கு அடுத்தபடியாக, பிராமணர்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகவும் இது விளங்குகிறது. பழமை வாய்ந்த புனித தோமையார் மலை கிறிஸ்துவ ஆலயமும் இங்குள்ளது. சென்னை விமான நிலையம், இத்தொகுதிக்கு வெகு அருகிலுள்ளது. புனித தோமையார் மலை துணை ஆணையர் அலுவலகம் இத்தொகுதியில் இயங்கிவருகிறது. புனித தோமையார் மலை அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி மையம் (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது.
மக்களின் கோரிக்கை
பரங்கி மலையில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மொத்தம் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதால் கனமழை பெய்யும்போது உள்பகுதிக்கு செ்லல போக்குவரத்து தடை ஏற்படுகிறது. சுரங்கப்பாதையில் நிரம்பும் நீரால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, தில்லை கங்காநகர் பகுதியில் இருந்து ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கவேண்டும். இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாததால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று படிக்க வேண்டிய சூழல் உள்ளது. பெண்களுக்காக அரசு கல்லூரி தொடங்கவேண்டும். தொகுதியின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை தொடங்கவேண்டும். ஆதம்பாக்கம் பகுதியிலுள்ள ஏரியைத் தூர்வாரி கால்வாய்களை சீரமைக்கவேண்டும். மேலும், ஆலந்தூர் பகுதியில் பொது கழிப்பிடங்கள் கட்டவேண்டும், சாலைகளை சீரமைக்கவேண்டும். அனைத்துப் பகுதியிலும் மின்விளக்குகள் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இத்தொகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.
பறக்கும் ரயில் திட்டம்
கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள திமுக ஆட்சியில் 417 கோடி செலவில் தொடங்கப்பட்ட ஆலந்தூர் - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்கேவண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கியமான கோரிக்கை. அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதையே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் உறுதியளித்தாலும், இத்தொகுதியில் யார் வெற்றிபெறுவார்? வெற்றி பெற்று வருபவர் இக்கோரிக்கையை எல்லாம் நிறைவேற்றுவாரா? என்பதை காலம் நமக்கு காட்டும்.
இதையும் படிங்க: தேர்தல் உலா - 2021: திருநெல்வேலி எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!