சென்னை: பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன.11) அஜித்குமார் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் வெளியானது. இதன் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டதால், திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிரம்பி வழிந்தன.
அந்த வகையில், சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனமாடி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது லாரியில் இருந்து கீழே குதித்தபோது, அவரது முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ரசிகர் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்த பரத்குமார் (19) என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அஜித் கட்அவுட்டிற்கு முதுகில் அலகு குத்தி மாலை அணிவித்த ரசிகர்