சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் குடும்பத்தினா், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காா்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் உள்ளிட்ட அமெரிக்கா்கள் கரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்திருந்தனர்.
ஆனால், கரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்ததையடுத்து, வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வருவதற்கும், வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்லவும் கடந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு செல்ல நினைத்தவர்கள் இங்கேயே இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க தூதரக அலுவலர்கள் இந்திய அரசுடன் பேசி, தங்கள் நாட்டிற்கு செல்ல சிறப்பு அனுமதி பெற்றனா். அதன்படி மும்பையிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் நேற்று மாலை 3.55 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து 5 சொகுசு பேருந்துகளில் 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 108 அமெரிக்கா்கள் சென்னை விமான நிலையத்திற்கு முன்னதாகவே அழைத்து வரப்பட்டிருந்தனா். அவா்கள் அனைவருக்கும் மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டு விமானம் ஏற தயாா் நிலையில் இருந்தனா். பின்பு அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனா்.
இதையடுத்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் மாலை 4.55 மணிக்கு சென்னையிலிருந்து 108 அமெரிக்கா்களுடன் மும்பை புறப்பட்டு சென்றது. பின்னர், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருந்த சுமாா் 100 அமெரிக்கா்களையும் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக சென்னை விமானநிலைய அலுவலர்கள் தெரிவித்தனா்.
இதையும் படிங்க : காய்கறிகள், பழங்களைக் கிடங்குகளில் பாதுகாத்திட வசூலிக்கும் கட்டணம் ரத்து - அரசாணை வெளியீடு