சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. இந்த அறிக்கையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பாகவே ஜெயலலிதாவிற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் திராட்சை, கேக், இனிப்புகளை சாப்பிட்டுள்ளார். அதன்பின் செப்டம்பர் 28ஆம் தேதி அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டத்தை தொடர்ந்து அவருக்கு நுரையீரலில் பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் அக்டோபர் 7ஆம் தேதி டிரக்கியோஸ்டமி சிகிச்சை தொடங்கப்பட்டது. அதன்பின் அக்டோபர் 14ஆம் தேதி முதல் லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவர்கள் சிசிக்சை அளித்துவந்தனர்.
டிசம்பர் 3ஆம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டும், மூளை மற்றும் இதயம் செயலிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆகவே ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா மோடிஜி...? மனிஷ் சிசோடியா கேள்வி...!