சென்னை: பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் தொழில்நுட்ப படிப்புகளை கற்பிப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறது. அதன் அனுமதி பெறாமல் தொழில்நுட்பபடிப்புகளை நடத்தினால் அந்த கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், நூறு கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிற்குமான மாணவர் சேர்க்கை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினால் வரையறை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு பாடப்பிரிவில் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் மாணவர்கள், தரமான கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டினாலும் அவர்களை சேர்க்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் 2024 முதல் 2027 ஆண்டு வரையில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வரம்பை மாற்றி அதிகபட்சமாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என அறிவித்துள்ளது.
அதன்படி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது. தற்போது பொறியியல் பாடப்பிரிவுகளில் அதிகமான மாணவர்கள் சேர்வதற்கு அனுமதி அளித்திருப்பதால், தரம் இல்லாத பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தானாகவே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.