சென்னையில் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவது குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு தலைவர் அனில் சகஷ்ரபுத்தே, 'உயர்கல்வி படிப்பவர்கள் ஆராய்ச்சியை நோக்கிச் செல்வது அதிக அளவிலிருந்தாலும், தரமான முறையில் இருப்பது அவசியமாகும். தரமான ஆராய்ச்சி வளர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதையடுத்து, ஏற்கனவே அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம் 30% குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். தற்போது மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரிப் படிப்புடன் தொழில் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளிலிருந்து, வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். பொறியியல் படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதில்லை என அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள கல்லூரிகள், பள்ளிக் கல்வி பயிலும் நிறுவனங்களாகும் மாற்றிக் கொள்ளலாம்"எனத் தெரிவித்தார்.