சென்னை: புதியதாக தாெழில்நுட்ப படிப்புகளை வழங்குவதற்கு அனுமதி கேட்கும் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், மாநிலம், யூனியன் பிரதேசத்திற்குள் ஒரே அல்லது வெவ்வேறு சங்கம், அறக்கட்டளை, நிறுவனம் நடத்தும் அதே பெயர்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், குறைந்தபட்சம் அது அமைந்துள்ள கிராமம், நகரத்தின் பெயரை நிறுவனத்தின் பெயருடன் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நல்ல உட்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள கல்லூரியின் பெயரும், குறைந்த கட்டமைப்பு வசதி கொண்ட கல்லூரியின் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால், மாணவர்கள் அவர்கள் விரும்பும் சிறந்த கல்லூரிக்குப் பதிலாக, மாற்றி அதே பெயர் கொண்ட வேறு கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், 2024 முதல் 2027 ஆண்டு வரையில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “புதியதாக தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கும், ஏற்கனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்லூரிகள் பாடங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அனுமதி பெற வேண்டும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 100 கல்லூரிகளில் மட்டுமே போதுமான ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் உடன் இருப்பதால் மாணவர்கள் அதிகளவில் சேர்கின்றனர். அது போன்ற கல்லூரிகள், அதே பெயரில் வேறு இடங்களில் கல்லூரியை திறந்து நடத்துகிறது. மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அரசுப் பல்கலைக்கழகத்தின் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர்.
இந்த நிலையில், ஒரே மாதிரியான கல்லூரி பெயர்களால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, புதியதாக தாெழில்நுட்ப படிப்புகளை வழங்குவதற்கு அனுமதி கேட்கும் கல்வி நிறுவனங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், மாநிலம், யூனியன் பிரதேசத்திற்குள் ஒரே அல்லது வெவ்வேறு சங்கம், அறக்கட்டளை, நிறுவனம் நடத்தும் அதே பெயர்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், குறைந்தபட்சம் அது அமைந்துள்ள கிராமம், நகரத்தின் பெயரை நிறுவனத்தின் பெயருடன் சேர்க்க வேண்டும்” என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கம்பத்தில் காந்தி சிலையின் கையை உடைத்த மர்ம நபர்கள்.. சிலையின் முன் குவிந்து வரும் கட்சியினர்!