சென்னை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவை கண்டித்து அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில், அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டு பாடிய ஜெயக்குமார்
ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘அண்ணே அண்ணே, ஸ்டாலின் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு, இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே’, என்று பாட்டுப்பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
‘சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் சொன்னபடி மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’, என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் வாக்குறுதி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது, “திமுக அரசு தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மாணவர்களின் கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருந்தது.
ஆனால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் அதிமுகவை மீட்போம் என டிடிவி தினகரன் கூறுகிறார். அனால் அவருடைய கட்சியையே காப்பாற்ற முடியவில்லை” என்றார்.
வரலாற்றையே மாற்றிய திமுக
இதையடுத்து நூறாண்டு சட்டப்பேரவை விழா குறித்து பேசும்போது, “திமுக அரசு வரலாற்றையே மாற்றி கூறியுள்ளது. அன்றைய தினத்தில் கலைஞர் 1937ஆம் ஆண்டு கணக்கில் எடுத்துக்கொண்டு பொன் விழா கொண்டாடினார்.
அந்த ஆண்டை கணக்கில் எடுத்தால் நூற்றநூற்றாண்டு 2037ஆம் ஆண்டு வரும். ஆனால் தங்களது பெயர்களை நிலைநாட்டுவதற்காக தவறாக வரலாற்றை மாற்றி 2021 நூற்றாண்டு கொண்டாட இருப்பது தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் செயல்” என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ஆவின் ஊழல் - நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை?