முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து பேசி வருகிறார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அதிமுகவினர் தேர்தல் நேரத்தில் திமுக மக்களிடம் நாடகமாடி பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த டிசம்பர் 22ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய 97 பக்க பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், "அதிமுக அமைச்சர்கள் மீது புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரம் கிடைக்க வேண்டியுள்ளது. இது பார்ட் 1 தான், பார்ட் 2 விரைவில் வரும். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் மீதான 2ஆவது ஊழல் பட்டியலை திமுக நிர்வாகிகள் வழங்க உள்ளனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்