சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் பல் ஆய்வகம் நடத்திவருபவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், தங்கை முறை உறவு கொண்ட சிறுமியுடன் (8) கடந்த 26ஆம் தேதி விளையாடச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இவர்களது பெற்றோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் காவல் துறையினருக்கு 13 வயது சிறுமி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில், தனக்கு நுரையீரல் பிரச்சினை இருந்துவருவதால் தனது பெற்றோர் அதிக பணம் செலவு செய்கின்றனர். எனவே, அவர்களுக்கு நான் மேலும் செலவு வைக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் காணாமல்போன எட்டு வயது சிறுமியும் தனது தங்கையை மட்டுமே பெற்றோர் நன்கு கவனிப்பதாகவும், தன்னை கவனிக்க மறுப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில், இவர்கள் இருவரும் செல்லும்போது அவர்களுடன் செல்போனை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களது செல்போன் எண்ணைக் கொண்டு தேடிவந்ததில் அவர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.
அதே சமயத்தில், இளைஞர் ஒருவருடன் இரண்டு சிறுமிகளும் அழுதுகொண்டே செல்வதாக திருநங்கைகள் சிலர் விழுப்புரம் ரயில்வே காவலர்களுக்குத் தகவல் அளித்தனர். இதையறிந்த காவலர்கள் உடனே அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னர் கோட்டூர்புரம் காவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
தொடர்ந்து விழுப்புரம் விரைந்த காவலர்கள் இரண்டு சிறுமிகளையும் மீட்டு, அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகன் சூர்யபிரகாஷ் (19) என்பதும், இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துவருவதும் தெரியவந்தது.
மேலும் இவருக்கும், 13 வயது சிறுமிக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியதாகவும், இதனாலே இருவரும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இதனையடுத்து சூர்ய பிரகாஷை கைதுசெய்த காவலர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் - வைகோ அறிவுரை