சென்னை: அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனியை கைது செய்யக்கோரி அதிமுக சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ் சென்னை மாநகர காவல் ஆணையர் இடம் புகார் மனு அளித்துள்ளார்.
வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவின் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள், திண்டுக்கல் லியோனியை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “கடந்த 21 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திண்டுக்கல் லியோனி அவதூறு கருத்துக்களை பரப்பினார். ஆகையால், அவரை கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல ஐடி விங் தலைவர் சுரேஷ், “திமுக அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலேயே இருக்கிண்றது. ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய திண்டுக்கல் லியோனியை கைது செய்யுமாறு புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
காலம் தாமதமாக ஏன் புகார் அளித்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, அதிமுக மாநாட்டில் மதுரையில் இருந்ததாகவும், தற்போது தான் காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுப்பதற்கு நேரம் கிடைத்ததாகும் தெரிவித்தார். இதற்கு முன்னதாக மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் மனு அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: சென்னையில் ஜவான் முன்னோட்ட வெளியீடு தொடங்கியது - ரசிகர்கள் ஆரவாரம்!