சென்னை தலைமைச் செயலக சட்டப் பேரவை வளாகத்தில், இன்று (அக் 17) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சில நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவருடன் வைத்தியலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் உள்பட பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து சட்டப்பேரவை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி கே. பழனிசாமி அருகில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் அமர்வாரா என்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், ஓபிஎஸ் அதே எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்டார். ஆனால், ஈபிஎஸ் தரப்பினர் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், “பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக தொண்டர்கள் இயக்கம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு,16 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அதிமுகவுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்ததுதான் இந்த இயக்கம்.
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக சட்ட விதியை மாசு படாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம். அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும் கட்டி காப்பாற்றும் நிலையில்தான் நாங்கள் உள்ளோம். அதிமுக சட்ட விதி அபாயகரமான சூழல், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக சார்ந்த முடிவுகளை தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்