சென்னை: அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியத் தலைமை நீதிபதி, குடியரசுத்தலைவர், மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆகியோருக்கு அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், "சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. காவல் கைதிகளின் சந்தேக மரணங்கள் (லாக்கப் டெத்), அரசு உயர் அலுவலர்கள் தற்கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு காவல்துறையை சுதந்திரமாகச் செயல்படவிடாமல், நல்ல திறமையான நேர்மையான அதிகாரிகளை இயல்பாக செயல்பட விடாமல், லஞ்ச ஒழிப்புத் துறையை தன் பணியாளாகக் கருதி தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில் செயல்படக்கூடிய ஒரு துறையாக மாற்றியிருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மீதும், உறவினர்களின் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகச் சோதனை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறது.
முன்னாள் வனத்துறை தலைமை அலுவலர் வெங்கடாசலம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியிலிருந்த போது அரசின் அழுத்தம் காரணமாகவும், அவரை பதவி விலகச் சொன்னதின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையைத் தவறாகப் பயன்படுத்தி அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்குத் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.
அரசு அலுவலர்களுக்கு மிரட்டல்
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அரசு அலுவலர்கள், நேர்மையான அலுவலர்கள் மிரட்டப்படுவதும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் ராயப்பா, முன்னாள் காவல்துறை அதிகாரி துரை, அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா போன்ற மர்ம மரணங்கள் வெளிச்சத்திற்கு வராமலே இருக்கிறது. அதன் நீட்சியாக வெங்கடாச்சலம் அவர்களும், சந்தோஷ் குமார் மரணமும் இணைந்திருக்கிறது.
இது போன்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பல வழக்குகளை விசாரணைக்கு எடுத்து நீதியை நிலைநாட்டி இருக்கிறது. கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதவிப் பொறியாளர் சந்தோஷ் குமார், திமுகவின் முக்கிய நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிபிஐ விசாரணை
வெங்கடாசலம் மரணத்தை சிபிசிஐடி விசாரிக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையும், சிபிசிஐடியும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உட்பட்ட புலனாய்வு அமைப்பு சார்ந்தது. அதனால், இந்த இரு நிகழ்வையும் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்பதால், வெங்கடாசலம் இந்திய வனப் பணி அதிகாரியாக இருந்தவர்.
எனவே, அவருடைய மர்ம மரணத்தை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் ஆணையம் அமைத்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்