சென்னை: அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதிக் கழகச் செயலாளர் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அவரது உருவப்படத் திறப்பு விழாவில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,"தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகமாகி விட்டது. போதைப் பொருட்களை எங்கள் ஏரியாவில் இளைஞர்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர் என காவல்துறையில் இளங்கோவன் புகார் அளித்துள்ளார். அதற்கு காவல்துறையினரும் இளைஞர்களை கைது செய்துள்ளனர். இதை மனதில் வைத்துக்கொண்டு தனியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளங்கோவனை படுகொலை செய்துள்ளனர். இந்த செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் இருக்கக்கூடிய தலைவர்கள் திரும்பி பார்க்கின்ற வகையில் மிகப்பெரிய பிரமாண்டமான மாநாடு மதுரையில் நடைபெறும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களிலும் அதிமுக தலைமையிலான அமைக்கப்படும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்திய தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரிக்க கோரி டெல்லியில் வழங்கு தொடர்ந்துள்ளோம்" என்றார்.
மேலும், "புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த பணி முடிந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேசும்போது அதை நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்கின்றனர். இதை கண்டித்து, எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்காக வெளிநடப்பு செய்தோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: TN Ration Shops: ரேஷன் கடைகளில் 3000 பொருட்கள் விற்பனை - ராதாகிருஷ்ணன் தகவல்