சென்னை: ஜனவரி 4ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதனால் பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளதால், இரு தரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உடன் உள்ள பாஜகவினரை ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் வைத்து சந்தித்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் ஆகியோர் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதனிடையே அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகாமல் உள்ளதால், இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் ஜனவரி 27 அன்று உச்ச நீதிமன்றத்தில், தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில், ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில்மனு அளிக்கப்பட்டது.
நேற்றைய முன்தினம் (பிப்.2) தேர்தல் ஆணையம் தரப்பில், ‘2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அன்றைய தினம் கையெழுத்தானவை தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படாது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது எங்கள் பணி இல்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்’ என தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று (பிப்.3) உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் கூறியது. இதனையடுத்து, “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கட்சியின் பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதில் எடுக்கப்படும் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து ஒரே வேட்பாளராகவும், பொது வேட்பாளராகவும் அமைய வேண்டும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக உடன்தான் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அதிமுகவின் முடிவே இறுதி முடிவே என அதிமுக - பாஜக மோதலும் வெடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (பிப்.4) காலை சென்னை ராயப்பேட்டை அலுவலகத்துக்கு, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வந்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து நாளை (பிப்.5) இரவு 7 மணிக்குள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் என்னிடம் வந்து சமர்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான கே.எஸ்.தென்னரசுவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ இடைத்தேர்தல் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் எடப்பாடிக்கு வெற்றி? உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?