சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால் வழக்கினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று (ஆகஸ்ட் 4) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவதாக உள்ளது என கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பு; வழக்கில் தங்கள் முன்பே வாதங்களை முன் வைக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இரு நாட்களுக்கு முன் தன்னிடமே முறையிட்டிருந்தால் விசாரணையில் இருந்து விலகியிருப்பதாக கூறினார்.
சற்று நேர அவகாசத்துக்கு பின், தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்றது குறித்து பன்னீர்செல்வம் தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும், புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்டு, வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும்படி, உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று' - டிடிவி தினகரன்