சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலக எம்ஜிஆர் மாளிகையில் 69 மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது, மாவட்டமாகச் சென்று நிர்வாகிகளைச் சந்திப்பது, அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையொட்டி கட்சி அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எடப்பாடி வாழ்க.. அதிமுகவின் விடிவெள்ளி எடப்பாடி.. என்றெல்லாம் கோஷங்களை எழுப்பிய வண்ணம் உற்சாகமாக இருந்தனர்.
முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அவதார புருஷர்கள். மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு ஈடு இணையாக எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை பிறந்ததும் இல்லை. எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்த பாஜகவினர் செயல் முழுக்க முழுக்க கண்டிக்கத்தக்கது" என்றார்.
சிலர் பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "அவர்களுக்குத் தகுதி இல்லையா?, ஜீரணிக்கச் சக்தி இல்லையா? என்று தெரியவில்லை. பொது வாழ்கையில் இருந்து வருவார்களுக்குத் தான் தெரியும். சிலர் 3 பட்டம் வாங்கிவிட்டோம் என்று பேசுவதால் தான் இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது. அண்ணாமலைக்கு வாய்க் கொழுப்பு அதிகம் அவரது நாவை அடக்க வேண்டும். ஊர்க் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆக முடியாது. அம்மா போல எவனாலும் ஆக முடியாது" என்று காட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்!