சென்னை: தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக என்ற குப்பையை ஒழித்தால் தான், விஷ பாம்பு என்ற பாஜகவை ஒழிக்க முடியும். 2021 தேர்தலில் தமிழகத்தில் இருந்த அடிமைகளை துரத்தி அடித்தது போல், 2024 தேர்தலில் அடிமைகளையும், எஜமானர்களையும் சேர்த்து விரட்டுவோம்” என கூறியிருந்தார். இந்த கடுமையான விமர்சனத்திற்கு அதிமுக, பாஜக தரப்பில் எதிர் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.
அமைச்சர் உதயநிதியின் விமர்சனத்திற்கு பதில் விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உதயநிதி என்ன தவறுகள் செய்தாலும் மு.க.ஸ்டாலின் கண்டிக்க மாட்டார். அதிமுகவை ஒழிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவை ஒழிக்க உதயநிதியின் அப்பா மு.க.ஸ்டாலினாலும் முடியவில்லை. மு.க.ஸ்டாலினின் அப்பா கருணாநிதியினாலும் முடியவில்லை. இவர் யார்? உதயநிதி ஒரு கத்துக்குட்டி. எத்தனை கருணாநிதி வந்தாலும், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இந்த உலகம் இருக்கும் வரை அதிமுக இருக்கும். அதை எழுச்சி மாநாட்டின் மூலம் உறுதி செய்து இருக்கிறோம்.
இதையும் படிங்க: K Annamalai: "ஊழலின் உறைவிடம் திமுக - அண்ணாமலை விமர்சனம்
திமுகவை எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்தார். அதேபோன்று ஜெயலலிதாவும் 10 ஆண்டுகள் திமுகவை வனவாசம் அனுப்பி வைத்தார். தப்பித்தோம், பிழைத்தோம் என 2021 ஆம் ஆண்டு வெறும் 3 சதவீத வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இந்த முறை ஆட்சிக்கு வரவில்லை என்றால் திமுக நிரந்தரமாக வனவாசம் சென்றிருக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுக கட்சியே இருக்காது. முதலில் உங்களுடைய முதுகை பாருங்கள். திமுக கரையான் போன்று ஒரு அரிக்க கூடிய கட்சி.
அன்று எம்.ஜி.ஆரின் உதவியாலே கருணாநிதி முதலமைச்சரானார். அப்படியெல்லாம் அரியணையில் ஏறி விட்டு இப்போது நாங்கள் குப்பையா? யார் குப்பை? யார் கரையான்? என்பது மக்களுக்கு தெரியும். கரையான்கள் நாட்டுக்கு தேவையில்லாத ஒன்று. விரைவில் கரையான்கள் களை எடுக்கப்படும். உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் ஒரு பக்குவம் இல்லை. வாய்க்கு வந்தபடி பேசும் ஒரு முதிர்ச்சி இல்லாத அரசியலை உதயநிதி செய்து கொண்டிருக்கிறார். அரசியலில் நாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டும். இதற்கு மேல் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்தால் ஆயிரம் விமர்சனங்களை நாங்களும் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியர்களுக்கு திண்டுக்கல் ஐ லியோனி பதிலடி!