சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்த அவைத்தலைவர் குறித்தும், சசிகலா விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கூட்டம் தொடங்கி சில மணி நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன் தொண்டர்கள் சிலர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் ஆர்ப்பாட்டம்
இலத்தூர் தொகுதி் ஒன்றிய செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.ராஜி கரோனா காரணமாக கடந்த மே மாதம் 12ஆம் தேதி காலமானார். அதன் பின்பு ஒன்றிய செயலாளராக ஓ.எம்.சுரேஷ் நியமனத்திற்கு கிளை செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் அன்வர்ராஜா பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அன்வர்ராஜாவை அடிக்க பாய்ந்ததாக தெரிகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஜனநாயக விரோத அரசு
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திமுக ஜனநாயக விரோத அரசு. மாநில தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனை முறியடித்து வெற்றி பெறுவோம்" என்றார்.
வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பதிலளித்த அவர், "அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களின் திருக்கோவிலாக நினைக்கும் இடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும். உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் உள்ளதோ, அந்த குளத்தை நோக்கி செல்வார்கள்" என்றார்.
அன்வர்ராஜா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கட்சிக்குள் கருத்து பரிமாற்றம் இருக்கும், அதற்கு வருத்தம் தெரிவிப்பது இயல்பு தான்" என்றார்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை