சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அதிமுக தலைமை.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா பற்றியும் தொடர்ந்து அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வந்தார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் , கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தார். இந்தச் செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமையும் எனவும் அவர் கூறினார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் தலைமைக் கழகம் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கையும் அதிமுகவினர் X (எக்ஸ்) சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவத் துவங்கி உள்ளது. மேலும், புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை அதிமுக ஒன்றிணைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் எனவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நன்றி மீண்டும் வராதீர்கள்" பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக!