சென்னை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 10 பாடப்பிரிவுகள் உள்ளன.
12 ஆம் வகுப்பு பாடப்பிரிவில் வேளாண் தொழில்படிப்பு படித்தவர்களுக்கு வேளாண் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில், நான்கு பாடப்பிரிவுகளில் 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதனால், இணைப்பு கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பொதுப்பிரிவிலும், சாதிவாரியான இட ஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்க அனுமதி மறுத்த பல்கலைக்கழக கொள்கை விளக்க குறிப்பேட்டை எதிர்த்து இனியன் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று(அக்.4) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகி, வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 905 இடங்கள் உள்ள நிலையில் 44 இடங்கள் மட்டுமே தொழில்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வேளாண் தொழிற்படிப்பு படித்தவர்களுக்கு பொதுப்பிரிவிலும், சாதிவாரியான இட ஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்க அனுமதிப்பது இரட்டை இட ஒதுக்கீடு வழங்குவதைப் போலாகி விடும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேளாண்மை குறித்து தொழில்கல்வி படித்தவர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய உத்தரவில், உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் இது பொருந்தும் எனக் கூறப்படாததால் இந்த இட ஒதுக்கீடு பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார்.
மேலும், தொழில் கல்வி படித்தவர்களை சாதிவாரியான இடஒதுக்கீட்டின் கீழும், பொதுப்பிரிவின் கீழும் விண்ணப்பிக்க அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிடலாம் எனக் கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு தள்ளுபடி