சென்னை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பயிரிடுவோர் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள், உழவர் பணி கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட பயிர்கடன்களையும், அவற்றுக்கான வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது அதிமுக அரசின் தேர்தல் யுத்தியாகவே பார்க்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பலனளிக்குமா, தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைத் தாண்டி, இந்த அறிவிப்பில் ஒளிந்துள்ள விவரங்கள் அடுத்த அமையவுள்ள ஆட்சிக்கு இது சுமையாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு அறிவிப்பின்படி, குறுகிய கால பயிர்க்கடன், நகையை அடகு வைத்துப் பெறப்பட்ட வேளாண் கடன்கள் ஆகியவை ரத்து செய்யப்படும். இத்திட்டத்தின்படி தகுதி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஜனவரி 31ஆம் தேதிவரை நிலுவையில் உள்ள பயிர்கடன்களுக்கான தொகை மொத்தமாக கணக்கிடப்பட வேண்டும். தள்ளுபடி செய்யும் தொகையை தமிழ்நாடு அரசு 7 விழுக்காடு வட்டியுடன் 5 ஆண்டுகளில் தவணை முறையில் திரும்பச் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையை அரசு வட்டியுடன் செலுத்தும் என கூறியுள்ளது.
நாட்டின் ஜிடிபியை விட மாநிலத்தின் ஜிடிபி அதிகம்
அதிமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி இதுகுறித்து கருத்து தெரிவித்த போது, "தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள்தான் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாநிலத்தின் ஜிடிபி 8.1 விழுக்காடாக உள்ளது.
பயிர்க் கடன் தள்ளுபடி தேர்தல் நலனுக்காக இல்லை, மக்கள் நலனுக்காக. இது அதிமுக அரசு காலம் காலமாக செய்து வரும் செயல். ஜெயலலிதா பயிர்கடன் தள்ளுபடி செய்தார். விவசாயிகளின் சுமையைக் குறைக்க வேண்டும் என்றே முதலமைச்சர் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளார். எதிர்பாராத கரோனா தாக்குதல், ஏராளமான புயல், வெள்ளங்கள் ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு
அதிமுக அரசின் வேளாண் கடன் தள்ளுபடியால் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு சுமை ஏற்படும் என்றும், ஆனால் இதுபோன்ற கவனம் ஈர்க்கும் திட்டங்களை அறிவிப்பதில் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் என்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திருநாவுக்கரசு குற்றஞ்சாட்டுகிறார்.
மேலும் அவர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் கடன்களை ரத்து செய்வோம் என மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி வேளாண் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் காலத்தில் வெகுஜனங்களை ஈர்க்க இதுபோன்ற அறிவிக்கப்படும் கவர்ச்சிகர திட்டங்கள் ஆபத்தானவை. விவசாயிகளின் பிரச்னை குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவான பார்வை இல்லை.
விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்றால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த தகவல்கள் அரசிடம் உள்ளதா? எத்தனை சிறு குறு விவசாயிகள் உள்ளனர் என்ற தகவல் உள்ளதா? எதுவுமே இல்லாமல் ஒட்டுமொத்தமாக கடன்களை தள்ளுபடி செய்வது எந்தப் பயனையும் தராது. மேலும், இது தமிழ்நாட்டுக்கு நீண்ட காலத்தில் சாபக் கேடாக அமையும். மாநிலத்தின் பொருளாதார சுமை அதிகரிக்கும்.
இந்தக் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் திணறும் போது அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய முன்வரும். இதனால் இது அனைத்தும் நம் தலையில் தான் விழப் போகிறது என்ற புரிதல் மக்களுக்கு வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நிலம் பெரும் முதலாளிகள் கையிலேயே இருக்கிறது சிறு, குறு விவசாயிகளின் கையில் இருக்கும் நிலம் என்பது குறைவு.
கிராமப்புற பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவ வசதி அதிகரித்துள்ளது. மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. அப்படியிருக்கும்போது ஓட்டு வாங்குவதற்காக இதுபோன்று கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு பின்பு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - பிப்.22 தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்