சென்னை: தேசிய கணித மற்றும் அறிவியல் நாளையொட்டி சென்னை லயோலா கல்லூரியில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் பல்துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் என்று 90 பேர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற உயர்கல்வி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு பதில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயிலத்தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!