சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.6) முதல் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கனமழை பெய்து வருகிறது.
டெல்டா பகுதியிலும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இடுப்பு அளவிற்கு நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடசென்னை, சென்னை பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்திற்குப் பிறகு நீதிமன்றம், சமூகஆர்வலர்கள் எனப் பலர் சாலைகளில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற வேண்டும், ஆறுகளை தூர்வார வேண்டும், கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அரசுக்கும், மாநகராட்சிக்கும் அறிவுறுத்தினர்.
பல கோடி ரூபாயில் திட்டங்கள்: ஆனால் அதே நிலை
அரசும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் தற்போது மீண்டும் வெள்ள நீர் குளம் போல் தேங்கி உள்ளது. பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து ஓடுகிறது.
"2015க்குப் பிறகு சென்னையின் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் மட்டும் 6 ஆயிரத்து 744.01 கோடி மதிப்பீட்டிற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் பணிகள் நடைபெற்றதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இவ்வளவு நிதிகளும் எங்கு சென்றன? எத்தனை திட்டங்கள் செயல்டுத்தப்பட்டன? 2015ஆம் ஆண்டுக்குப் பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சென்னை மாநகராட்சியை, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
சென்னையை மேம்படுத்துவதற்கு மாநில அரசு மட்டுமின்றி ஒன்றிய அரசும் சென்னையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 2016ஆம் ஆண்டு முதல் தியாகராய நகர், பாண்டி பஜார், ஒஎம்ஆர் (OMR) போன்ற இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டன.
தெற்கு, மத்திய மற்றும் வடசென்னை என அனைத்து இடங்களிலும் மழை நீர் கால்வாயை மேம்படுத்த டெண்டர் விடப்பட்டு அந்தப் பணிகளும் தொடங்கப்பட்டன. பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் மழை பெய்தால், மீண்டும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' என்பது சென்னையை அழகுபடுத்துவது மட்டும் இல்லை, மழை பெய்தால் நீர் தேங்காமல் இருந்தால் இருப்பதுவே 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' ஆகும்'' என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவிக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அழகுபடுத்த மட்டும் இல்லை
இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயராமன், "சென்னை மழையால் பெரிதும் பாதிக்கப்பட முக்கியமான காரணம் அலுவலர்கள் ஊழலில் ஈடுபடுவதுதான்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தன் நெருங்கியவர்களுக்கு மட்டும் டெண்டர்களைவிட்டது போன்ற காரணங்களால் எந்தப் பணிகளும் சரியாக நடக்கவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகி விட்டது. கடந்த ஆட்சியில் திமுக அரசு எதிர்த்த திட்டங்கள் மற்றும் அதில் ஊழல் செய்திருக்கும் அலுவலர்கள், அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு இருக்க வேண்டும். ஆனால், இதுவரை செய்யவில்லை.
ஊழல் மற்றும் தவறு செய்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிகள் சரியாக நடக்கும். 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' என்பது சென்னையை அழகுபடுத்துவது மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவல்ல ஸ்மார்ட் சிட்டி திட்டம். எவ்வளவு மழை பெய்தாலும் நீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்வது தான் 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' ஆகும்.
அதுமட்டுமில்லாமல் ஏரி குளங்களை முறையாகத் தூர்வார வேண்டும், பராமரிக்க வேண்டும். ஆனால் மாநகராட்சியும், அரசும் எந்த ஏரி, குளங்களையும் சரியாக பராமரிப்பதில்லை. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
வெள்ளத் தடுப்பு பணி - 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
ஏரிகள் இருக்கும் பகுதிகளில் சிஎம்டிஏ கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
இதனால் நீர் செல்ல முடியாமலும், நீரைத் தேக்கி வைக்க முடியாமலும் ஆங்காங்கே குளம் போல காட்சி அளிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது திமுக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஆக்கிரமிப்பு செயல்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகளை சரிவர செய்யாமல் அலுவலர்கள் பொய்யான கணக்குகளை காட்டுகின்றனர். அதனால் பணிகள் முறையாக நடைபெறாமல், மழைநீர் செல்ல முடியாமல், ஆங்காங்கே கழிவு நீருடன் கலந்து, வெளியேறி தெருக்களில் நின்று விடுகிறது.
சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மட்டும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மெட்ரோ என அனைத்து துறைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், சென்னையில் அதே அவலநிலைதான் தொடர்கிறது.
ஊழல் செய்யும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பணிகள் சரியாக நடக்கும். மீண்டும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாது'' எனத் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பது ஒரு காரணம்
இது ஒரு புறம் இருக்க 2016க்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. சென்னை மழையால் பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வார்டு உறுப்பினர்கள் இருந்தால், அந்த அந்த வார்டுகளில் வெள்ள நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். தற்போது யாரும் இல்லாத காரணத்தால், இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
சமூக ஆர்வலர்கள், அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் வெள்ளப் பாதிப்புகள் குறித்து முந்தைய அரசு, அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டுவருகின்றனர். இனியாவது, சென்னையைக் காப்பாற்ற அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை : அமைச்சர்கள் அடங்கிய குழு